டெஹ்ரான்: ‘ஈரான் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா?’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தேகம் எழுப்பிய நிலையில், கமேனி கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. போர் துவங்கிய முதல் நாளிலேயே, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, புதிய உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதே சமயம், வான்வழி தாக்குதலில் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டபோது, அவரது மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டது. இதனால், அவருக்கு ரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த ஊகங்கள் அனைத்தும் உண்மை என்பது போல, பாரசீக புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது அறிக்கை மட்டுமே வெளியானது. மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரில் ஈரான் பின்வாங்காது என்ற செய்தியும் அவர் விடுத்த அறிக்கையாகவே ஈரான் ஊடகங்களில் வாசிக்கப்பட்டது.
இந்த சூழலில், ‘ஈரானுடன் பேச்சு நடத்துகிறோம்; ஆனால், புதிய உச்ச தலைவருடன் நடக்கிறதா என்பது தெரியவில்லை. ஏனெனில், அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை’ என, அமெரிக்க அதிபர் டிரம்பும் கூறியிருந்தார்.
இதனால், சந்தேகம் வலுத்திருந்த நிலையில், மொஜ்தபா கமேனி கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. அதில், ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானுக்கு பக்கபலமாக இருக்கும் ஈராக் அரசுக்கும் மக்களுக்கும் நன்றி.
‘ஈரான் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்த ஈராக்கின் ஷியா மத தலைவர் அயதுல்லா அலி சிஸ்தானிக்கு பாராட்டுகள்’ என குறிப்பிட்டுள்ளார்.
மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் நேரடியாக தோன்றவில்லை. அவரது செய்திகள் அனைத்தும் அறிக்கைகளாகவோ அல்லது ஆடியோ வடிவிலோ வெளியாகி வருகின்றன.
