புதுடில்லி: ”நம் நாடு நக்சல் பிரச்னையில் இருந்து விடுதலை பெற்றுள்ளது. அவர்களின் கடைசி கோட்டையாக இருந்த சத்தீஸ்கரின் பஸ்தார், வளர்ச்சியின் பாதைக்கு திரும்பியுள்ளது. இறுதி கட்ட நடவடிக்கைகள் முடிந்தவுடன், முறையான அறிவிப்பு வெளியிடப்படும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லிமென்டில் கூறியுள்ளார்.
நக்சல் ஆதிக்கத்தை மார்ச் 31க்குள் முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக, லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது.
எம்.பி.,க்களின் கருத்துகளுக்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நம் நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், 60 ஆண்டுகளில் காங்., ஆட்சியில் இருந்தது. ஆனால், நக்சல் பிரச்னையில் அக்கட்சி முறையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறி விட்டது. இதனால், 20,000 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 12 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நக்சல் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உறுதிபூண்டு, திடமான நடவடிக்கைகளை எடுத்தது. அதன் விளைவாக, நம் நாடு நக்சல் பிரச்னையில் இருந்து விடுதலை பெற்றுள்ளது.
நக்சல்களின் கடைசி கோட்டையாக இருந்த சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதி, தற்போது வளர்ச்சியின் பாதைக்கு திரும்பி வருகிறது. அங்குள்ள ஒவ்வொரு கிராமங்களில் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து கிராமங்களிலும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவ வசதிகள் என, அனைத்து வசதிகளும் கிடைத்துள்ளன. அந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆதார் வழங்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் கிடைத்து வருகின்றன.
நக்சல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, மார்ச் 31ம் தேதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், பெரும்பகுதியை முடித்து விட்டோம். கடைசியாக சில பணிகள் நடந்து வருகின்றன. இது முடிந்ததும், முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
