மே ற்காசிய போர் காரணமாக, அரசு பத்திரங்களை முதலீட்டாளர்கள் அதிக அளவுக்கு விற்பனை செய்து வருவதால், 10 ஆண்டு அரசு பத்திரங்களின் வருவாய், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக 7 சதவீதத்தை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 115 அமெரிக்க டாலரை கடந்துள்ளது. இது பங்கு சந்தைகளிலும், பத்திர சந்தைகளிலும் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
அதிக எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருப்பதால், தற்போதைய கச்சா எண்ணெய் விலை உயர்வானது, உள்நாட்டில் பணவீக்கத்தை அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
இதன் காரணமாக, நாட்டின் இறக்குமதி செலவு அதிகரித்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை உயரும் என நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்த அச்சம் காரணமாக, முதலீட்டாளர்கள் பழைய பத்திரங்களை அதிகளவில் விற்க துவங்கியுள்ளதால், பத்திரங்களின் விலை குறைந்துள்ளது. எப்போதுமே பத்திரத்தின் விலை குறையும்போது, அதன் வாயிலாக கிடைக்கும் வருவாய் உயரும்.
தற்போது வருவாய் 7 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த 2024 ஜூலை மாதத்துக்கு பின், இதுவே அதிகபட்ச வருவாய் ஆகும்.
