கொரோனா காலகட்டத்துக்கு பின் பங்கு சந்தைகள் மிக மோசமான சரிவை கண்ட மாதங்களில் ஒன்றாக, இந்த மார்ச் மாதம் அமைந்துவிட்டது. இந்த மாதத்தில் மட்டும் நிப்டி, சென்செக்ஸ் ஆகிய இரண்டு குறியீடுகளும் கிட்டத்தட்ட 10.50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளன.
நேற்றைய வர்த்தகத்தில், நிப்டி 488 புள்ளிகள் சரிந்து, 22,331 புள்ளிகளிலும்; சென்செக்ஸ் 1,635 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 71,947 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 18.60 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது.
இந்த சூழலில், அவசரப்பட்டு பங்குகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும்; நிப்டி மீண்டும் 24,000 புள்ளிகளை தாண்டி நிலைபெற்றால் மட்டுமே சந்தையில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவரை தரமான பங்குகளை மட்டும் சரிவின்போது கவனமாக தேர்வு செய்யலாம் என தெரிவிக்கின்றனர்.
