யார் இந்த சயோனி கோஷ்? TMC டூ BJP – முதல்வர் விஜய் உடனான சந்திப்பின் பின்னணி – know about tmc rebel mp saayoni ghosh recently met tamil nadu cm vijay

தமிழக முதலமைச்சர் விஜய்யை நேற்றைய தினம் சயோனி கோஷ் சந்தித்து பேசியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த எம்.பியான இவர், இந்த திடீர் சந்திப்பை நிகழ்த்த வேண்டிய பின்னணி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் அரசியல் சாயம் பூசுவதற்கு தயாராகி வருகின்றனர்.

சயோனி கோஷ்… இந்த பெயரை தமிழக மக்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவர் ஒரு பெங்காலி நடிகை. 30க்கும் மேற்பட்ட படங்கள், வெப் சீரிஸ், தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். தற்போது மேற்குவங்க மாநிலம் ஜாதவ்பூர் மக்களவை தொகுதி எம்.பியாக உள்ளார். இவர் எந்த கட்சி என்பதில் தான் பெரிய சிக்கல். 2021ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அசன்சோல் தெற்கு தொகுதியில் சீட் வழங்கப்பட்டது. ஆனால் 4,487 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் தோல்வியடைந்தார்.

சயோனி கோஷ் அரசியல் பின்னணி

அதன்பிறகு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2024ஆம் ஆண்டு ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சீட் வழங்கப்பட்டது. அதில் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இந்த சூழலில் 2026 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில், சயோனி கோஷ் உள்ளிட்ட 20 எம்.பிக்கள் அதிருப்தி கோஷ்டியாக மாறினர். இவர்கள் ககோலி கோஷ் என்ற பெயரில் தனி அணியாக செயல்பட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்தனர்.

பாஜக ஆதரவு நிலைப்பாடு

எண்ணிக்கையின் அடிப்படையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கையில் இருந்து தப்பினர். தற்போது சயோனி கோஷ் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேற்றைய தினம் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

முதல்வர் விஜய் – சயோனி கோஷ் சந்திப்பு

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு மற்றும் அதன் எதிர்கால அரசியல், ஒருங்கிணைந்த வளர்ச்சி, புதிய வாய்ப்புகள், சிறந்த நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசித்தோம். மேற்கு வங்க மாநிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மீது மிகுந்த ஈடுபாடும், மரியாதையும் வைத்திருப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். அவரது சிறப்பான உபசரிப்பால் மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டை தொலைநோக்கு சிந்தனையில் நல்ல விஷயங்களை செய்வதற்கு வாழ்த்துகளை தெரிவித்தேன் என்று பதிவிட்டுள்ளார். இதனுடன் முதலமைச்சர் விஜய் உடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் என்ன சொல்லப் போகிறது?

இந்நிலையில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் ஒரு எம்.பி எதற்காக தமிழக முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் காங்கிரஸ் உடன் தவெக கூட்டணியில் இருக்கிறது. சமீபத்தில் கூட இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் அடுத்த பிரதமருக்கான ரேஸில் விஜய்க்கு 9.2 சதவீதம் பேர் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இது காங்கிரஸ் தரப்பிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் விஜய், சயோனி கோஷ் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. விஜய் அடுத்த பிரதமர் என்று பேசி வரும் தவெக அமைச்சர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்து வருகிறார். அவர் இந்த விஷயத்தை எப்படி பார்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Source link