சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியுடன், ராமதாசின் பா.ம.க., கூட்டணி அமைத்துள்ளது. 23 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, சசிகலா நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்நிலையில், முதல் கட்டமாக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ராமதாஸ் நேற்று அறிவித்தார். அதன்படி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
வந்தவாசியில் முரளிசங்கர், கும்பகோணத்தில் ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின், விருத்தாசலத்தில் சுரேஷ், மயிலாடுதுறையில் பாக்கம் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுவர் என ராமதாஸ் அறிவித்து உள்ளார்.
இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
பழனி தொகுதியில் பாண்டியும், கந்தர்வகோட்டையில் சின்னதுரையும், பத்மநாபபுரத்தில் செல்லசுவாமியும், திருவொற்றியூரில் சுந்தரராஜனும், கீழ்வேளூரில் லதாவும் போட்டியிடுகின்றனர்.
