புதுக்கோட்டை அருகே பழங்குடியின மாணவிகளை அரசுப் பேருந்திலிருந்து தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதுக்கோட்டை அருகே உள்ள ரங்கம்மாள் சத்திரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள், புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வதற்காக அப்பகுதியில் உள்ள அரசு நகரப் பேருந்தில் ஏறியுள்ளனர்.
அரசு பேருந்தில் நிகழ்ந்த அசம்பாவிதம்
பேருந்து சிறிது தூரம் சென்றதும், கூட்டமாக இருக்கிறது எனக் கூறி ஏறிய மாணவிகளைக் கீழே இறங்குமாறு நடத்துநர் (Conductor) வற்புறுத்தியுள்ளார். மாணவிகள் இறங்க மறுத்த நிலையில், ஒரு மாணவியை நடத்துநர் பலவந்தமாகத் தள்ளிவிட்டதாகவும், அதில் அடுத்தடுத்து பேருந்தில் ஏறியிருந்த 11 பழங்குடியின மாணவிகளும் பேருந்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்த மாணவிகள் கண்ணீருடன் கதறியதைக் கண்ட அவ்வழியாகச் சென்ற சமூக ஆர்வலர்கள், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, காயம் அடைந்த மாணவிகள் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவிகளுக்குக் கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடத்துனர் மீது அதிகாரிகள் நடவடிக்கை
இது குறித்துப் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, “இச்சம்பவம் குறித்துத் தகவல் வந்துள்ளது. உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடத்துநர் அல்லது ஓட்டுநர் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரங்கம்மாள் சத்திரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் முதல் தலைமுறையாக அரசுப் பள்ளிகளிலும் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரிகளிலும் கல்வி பயின்று வருகிறார்கள்.
நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை
கீரனூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் செல்லும் தடம் எண் 8 நகரப் பேருந்தில், காலை நேரங்களில் பயணிகள் மற்றும் மாணவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அந்த வழித்தடத்தில் நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இயங்குவதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
Source link
