ரூ.4,800 கோடியில் மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

பாதுகாப்பான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டங்கள்

ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் (Desalination Plant) அமைக்கப்படும்.

ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாயும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ.410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

நவீன பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை

மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும்,

குன்றத்தூர் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி செலவிடப்படும்.

அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், ‘திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள்* (Waste to Energy Projects) செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் மொத்தம் ரூ. 547 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சாலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பு

சாலைகளைச் சீரமைக்க, புதிய சாலைகள் அமைக்க, சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளிகளைச் சுற்றி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் (Safe Access to Schools) மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் (Improvement of Traffic Islands) ரூ.110 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள் ரூ.165 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் அனைத்தும் ரூ.275 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டமாக செயல்படுத்தப்படும்.

Source link