Doctor Vikatan: வெற்றிலையில் கற்பூரம் வைத்துச் சாப்பிட்டால், பீரியட்ஸ் தள்ளிப்போகுமா?

Doctor Vikatan: எங்களுடையது கூட்டுக்குடும்பம். அதனால் அடிக்கடி ஏதேனும் பூஜை, விசேஷங்கள் வந்துகொண்டே இருக்கும். பீரியட்ஸ் நாள்களில் ஒதுங்கியே இருக்க வேண்டும்.

முக்கியமான தினங்களின் போது பீரியட்ஸ் வந்துவிடாமலிருக்க அவ்வப்போது மாத்திரை போட்டுக்கொள்வது வழக்கம். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் படித்தேன்.

சப்ஜா விதைகளை ஊறவைத்த தண்ணீர் குடிப்பது, சிறிது கற்பூரத்தை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடுவது, இஞ்சிச்சாறுடன் வெல்லம் சேர்த்து எடுத்துக்கொள்வது எல்லாம் பீரியட்ஸை இயற்கையான முறையில் தள்ளிப்போடும் என்று சொல்லியிருந்தார்கள்.

அது எந்த அளவுக்கு உண்மை… அதேபோல பீரியட்ஸைச் சீக்கிரமே வரவழைக்க இயற்கையான வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ‘மூலிகைமணி’ அபிராமி. 

சித்த மருத்துவர் அபிராமி

இன்று சுகாதார வசதிகள் பெருகிவிட்டன. சானிட்டரி நாப்கின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இந்நிலையிலும், அந்தக் காலத்துப் பழைய நடைமுறைகளைப் பின்பற்ற நினைப்பது தேவையற்றது. அப்படிப் பின்பற்றுவது சாத்தியமும் இல்லை. 

உங்களுக்கு முறையான மாதவிடாய் சுழற்சி (Regular Periods) அதாவது 28 முதல் 35 நாள்கள் இருந்தால் மட்டுமே பீரியட்ஸைத் தள்ளிப்போடும் திட்டமிடல் பலன் தரும். முறைதவறிய சுழற்சி இருந்தால் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைக்க வேண்டாம். 

மாதவிடாய் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சில விஷயங்களைச் செய்யத் தொடங்க வேண்டும். அந்த வகையில் சப்ஜா விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்துக் குடிப்பதும், பொட்டுக்கடலை சாப்பிடுவதும் உடல் சூட்டைத் தணித்து மாதவிடாயைத் தள்ளிப்போட உதவும். இதை நீங்கள் பீரியட்ஸ் வருவதற்கு ஒரு நாள் முன்பு செய்தால் பலன் கிடைக்காது. ஒருவாரம் முன்பே செய்யத் தொடங்கினால் ஒருநாளோ, இரண்டு நாள்களோ பீரியட்ஸ் தள்ளிப்போகும், அவ்வளவுதான்.

நீங்கள் கேட்டுள்ளபடி சிறிது கற்பூரத்தை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடுவதெல்லாம் சரியான விஷயமல்ல. மருத்துவர்கள் யாரும் அதையெல்லாம் அனுமதிக்கவே மாட்டார்கள்.

அதேபோல இஞ்சிச் சாற்றுடன் வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால்,  இஞ்சிச் சாறு சிலருக்கு வயிற்று எரிச்சலையும், வயிறு, குடல் தொடர்பான உபாதைகளையும் தரக்கூடும்.

வாழைப்பூ
வாழைப்பூ

வாழைப்பூவிலிருந்து இரண்டு மடல்களை எடுத்துக்கொள்ளவும். அந்தப் பூக்களின் நடுவில் உள்ள நரம்புகளை நீக்கிவிடவும். அந்தப் பூக்களுடன், சிறிது பொட்டுக்கடலை மாவும் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். அதில் சிறிது மோர் அல்லது தண்ணீர் கலந்து காலை, மாலை என இருவேளை குடித்து வரலாம்.

இது பீரியட்ஸை இயற்கையாகத் தள்ளிப்போட உதவும். மாதவிடாய் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே எள் உருண்டை சாப்பிட்டு வந்தால், பீரியட்ஸ் முன்கூட்டியே வரும். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் சூட்டைச் சீராக்கி பீரியட்ஸ் வரத் தூண்டும்.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக எப்போதாவது ஒருமுறை இயற்கை வழியில் பீரியட்ஸை தள்ளிப்போட முயல்வது தவறில்லை. ஆனால், அடிக்கடி மாதவிடாய் சுழற்சியை மாற்றியமைப்பது உடலின் ஹார்மோன் சமநிலையைப் பாதித்து, முறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கு (Irregular Periods) வழிவகுத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, உங்கள் வீட்டு விசேஷங்களை பீரியட்ஸ் வரும் நாளுக்கேற்ப மாற்றித் திட்டமிடப் பாருங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Source link