“துப்பாக்கி படம் பாத்துட்டு 150 -பேர் ராணுவத்துல சேந்தாங்க” – சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ புதுத்தகவல்? – 150 people joined the army after watching thuppakki tvk mla in tamil nadu assembly

தமிழக சட்டப்பேரவையில் தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் விஜய் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ விஜயகுமார், தனது அறிமுக உரையைத் தொடங்கினார். அப்போது, “தோன்றின் புகழோடு தோன்றுக” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையைத் தொடங்கிய அவர், தொடக்கம் முதலே சற்று தடுமாற்றத்துடன் பேசி வந்தார்.

சுருக்கமாக பேச அறிவுறுத்தியும் தொடர்ந்த வாழ்த்து

விஜயகுமார் தனது உரையைத் தொடர்ந்து பேசிய நிலையில், அவைத் தலைவர் சுருக்கமாக முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இருப்பினும், அவர் தொடர்ந்து முதல்வர் விஜயை வாழ்த்திப் பேசிக்கொண்டிருந்தார். மேலும், மானியக் கோரிக்கை விவாதத்துடன் நேரடியாக தொடர்பில்லாத சில கருத்துகளையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

‘துப்பாக்கி’ படத்தை பார்த்து..

விஜயகுமார் பேசுகையில், நடிகர் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ திரைப்படத்தைப் பார்த்து சுமார் 150 இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்ததாகக் குறிப்பிட்டார்.

அந்த இளைஞர்களில் பலர் பொறியியல் படித்தவர்கள் என்றும், விஜயின் திரைப்படத்தைப் பார்த்த பின்னர் மனம் மாறி, தாய்நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ராணுவத்தில் இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சட்டப்பேரவை உரைகள் குறித்து தொடரும் விமர்சனம்

சட்டப்பேரவையில் முதல்முறையாக பேசும் எம்எல்ஏக்களுக்கு ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இருப்பினும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் சட்டப்பேரவை உரைகள் குறித்து இணையதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக, தொகுதிக்குத் தேவையான முக்கியமான கோரிக்கைகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் மானியக் கோரிக்கைகளுடன் தொடர்புடைய விவகாரங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, முதல்வர்விஜயை வாழ்த்துவதிலேயே அதிக நேரம் செலவிடப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

‘மன்மத வணக்கம்’ எனக் கூறிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ

இதற்கு முன்தினமும் சட்டப்பேரவையில் இதுபோன்ற ஒரு சம்பவம் பேசுபொருளானது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், தனது உரையின்போது ‘மனமார்ந்த வணக்கம்’ என்பதற்குப் பதிலாக ‘மன்மத வணக்கம்’எனக் கூற முயன்றதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

பாயிண்டாக பேசிய அமைச்சர் ரமேஷ்…காது குடுத்து கேட்ட சி.எம் விஜய்

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தொகுதி மக்களின் பிரச்சினைகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசின் கொள்கைகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைப்பதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், அவையின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Source link