2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தவெக தலைவர் விஜய் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (30-03-26) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்தி இருந்தார்.
வேட்பாளர்களை அறிவித்த அன்றே கே.வி.கும்பம் தவெகவினர் வேலை செய்த தங்களுக்கு இடத்தை ஒதுக்காமல் புதியதாக சேர்ந்த நபர்களுக்கு சீட்டு கொடுத்ததாக தவெக தலைமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதேபோல் தேனி மாவட்டம் கம்பம் தொகுதிக்கும் தவெக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கம்பம் தொகுதியில் ஜெகநாத்மிஸ்ரா என்பவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட தவெக பெண் நிர்வாகிகள் வேட்பாளரை மாற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேநேரம் ஜெகநாத்மிஸ்ரா சில மாதங்களுக்கு முன்பு சாதிச் சங்க விழாவில் கலந்துகொண்டு பேசிய காட்சி ஒன்றும் வைரலாகி வருகிறது அதில் பேசிய ஜெகநாத் மிஸ்ரா,”30 ஆண்டுகளாக இந்த மக்களை ஏமாற்றியது அரசுகள் தெரியாதா? நான் எந்த கட்சியின் சார்ந்தவன் கிடையாது நான் சாதிக்காரன். நான் சாதி வெறியன்” என்று பேசும் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
