சென்னை: மே மாதம் ஒரு விழா நடக்கும்; மீண்டும் ஸ்டாலினை முதல்வர் என அழைப்பேன் என நடிகர் கமல் தெரிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்து, ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கமல் பேசியதாவது: மே மாதம் ஒரு விழா நடக்கும். அந்த விழாவில் மீண்டும் ஸ்டாலினை இப்பொழுது அழைத்தது போலவே , ”மாண்புமிகு முதல்வரே” என்று அழைக்க போகிறேன் என்ற எதிர்பார்ப்புடன் தான், இந்த கூட்டத்திற்கே வந்து இருக்கிறேன்.
மத நல்லிணக்க முற்போக்கு கூட்டணி என்கிறோம். முற்போக்கை தவிர, வேற வழியில்லை, பிற்போக்கு ஒரு சாய்ஸ் ஆக இருக்கவே முடியாது. அது தான் இந்த ஆல்டர் நேட்டிவ் சாய்ஸ். அது எங்களுக்கு வேண்டாம் என்று முடிவு எடுத்தவர்கள் எல்லோரும் இங்கே இருக்கிறோம். என் தொண்டர்களுக்கும், முழு உழைப்பிற்கான வெற்றியை கொடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளையாகவும், சிலருக்கு ஆணையாகவும் பிறப்பித்து விட்டு இங்கே வந்து இருக்கிறேன்.
இங்கே இந்தியாவில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இந்த அரசியல் சூழலில், நாம் எல்லோரும் கோட்டை தான் அதிகாரத்தின் அடையாளம் என்று நினைத்து கொண்டு இருந்தோம். தமிழகமே அதுவாக இப்பொழுது மாறிவிட்டது. நாம் எதிர்க்க வேண்டிய சக்தி என்ன என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதனை முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமையை செய்ய போகிறேன். நீங்களும் செய்வீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். வாழ்க தமிழகம், வாழ்க இந்தியா, வணக்கம். இவ்வாறு கமல் பேசினார்.
