2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, ”இந்த இயக்கத்தைப் பொறுத்தவரை நான் என்னுடைய தந்தையார் காலத்திலிருந்து நான் இருக்கிறேன். எந்த இடம்பெயரலும் இல்லாமல், அதேபோல எந்த சோதனைகள் வந்தாலும் நான் மாறியது இல்லை. என் உடலில் ஓடுவது உங்கள் உடலில் ஓடுவதைப் போல அதிமுக ரத்தம் தானே ஒழிய துரோக ரத்தம் கிடையாது. என் உடலில் ஓடுவது தியாக ரத்தம் தானே ஒழிய துரோக ரத்தம் கிடையாது. ஆக என்னுடைய வாழ்வும், என் அர்ப்பணிப்பும் அதிமுவிற்குதான். நான் இறந்தால் கூட என் மேல் அதிமுக கொடிதான் போற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.
இந்த இயக்கத்திற்காக என் உயிர் இருக்கின்ற வரை இருப்பேன். இங்கே இருக்கிற அத்தனை பேருமே கொடுக்கும் உழைப்புக்கு நான் எவ்வளவு காலம் நன்றியாக இருந்தாலும் கூட திருப்பி செலுத்த முடியாது. அதேபோல என்னுடைய குடும்பத்திற்கு எல்லாம் செய்துவிட்டேன். இனிமேல் உங்களுக்கு தான் என்னுடைய வாழ்க்கை. நான் உங்களோடுதான் இருப்பேன். உங்களுக்குத் தேவையானதை செய்வேன். நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணி என்னவென்று சொன்னால் நாம் அனைவரும் சேர்ந்து இந்த இயக்கத்தை வெற்றி பெற வைத்து எடப்பாடியரை முதலமைச்சர் ஆக்குவதுதான் எம்ஜிஆர்,ஜெயலலிதாவிற்கு நாம் செய்கின்ற நன்றிக் கடன்”என்றார்.
