பெங்களூருவில் இருந்து ஓசூரில் பாயும் தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் அதிகமாக கலந்து வருவதால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கர்நாடகா அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகிறது. இதுபற்றி சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ராஜீவ் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய ஓசூர் அதிமுக எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா ரெட்டி, ஓசூர் மக்களின் ஜீவாதாரமான நதியாக தென்பெண்ணை ஆறு திகழ்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையான நீராக இருந்தது. மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தினர். கடந்த 10, 15 ஆண்டுகளாக பெங்களூருவில் இருந்து கழிவுநீர் வந்து கலக்கிறது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டார். தற்போது தென்பெண்ணை ஆற்றின் நிலையை பற்றி தான் சமூக வலைதளங்களில் அதிக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
துர்நாற்றம் வீசும் தென்பெண்ணை ஆறு
நிறைய கெமிக்கல்கள் கலந்து வருகிறது. இந்த நீரை தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும், கர்நாடகா அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் சேர்ந்து சோதனை செய்துள்ளது. மிகவும் மாசடைந்த நதி என்பதை உறுதி செய்துள்ளனர். இந்த ஆற்று நீரானது துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி அதிகமாகி விட்டது. பொதுமக்கள் தொட்டாலே தோல் நோய் வருகிறது. கால்நடைகளுக்கு பலவிதமான நோய்கள் வருகின்றன. இந்த விஷயத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
மேட்டூர் அணை திறப்பு குறித்த கேள்வி…அமைச்சர் ஆனந்த சொன்ன பதில்
சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் பதில்
அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜீவ், தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையில் உள்ள எல்லையில் இருந்து கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி என 50 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. அதை உறுதி செய்துவிட்டோம். பொதுவாக வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வர வேண்டும். ஆனால் தற்போது 365 நாட்களும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பெங்களூருவில் இருந்து வரும் கழிவுநீர்
1,400 MLD நீரானது பெங்களூருவில் இருந்து வரும் கழிவுநீராக தான் உள்ளது. இதற்காக மொத்தம் 40 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP) அமைக்குமாறு கர்நாடகா அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை 24 மட்டுமே செயல்பட்டு வருகின்றன. எஞ்சிய 16 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்குமாறு கர்நாடகா அரசை தமிழக அரசு சார்பில் வலியுறுத்தியுள்ளோம்.
16 STP-க்கள் என்னாச்சு? கர்நாடகா அரசுக்கு கோரிக்கை
தமிழகத்திற்குள் பாயும் நீர் பெரிதும் மாசடைந்து வருகிறது. இந்த விஷயத்தில் கர்நாடகா அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். இதுதொடர்பாக மீண்டும் கர்நாடகா அரசை வலியுறுத்துவோம் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார்.
Source link
