இன்று (செப்டம்பர் 3) வியாழக்கிழமை லுமினோ இண்டஸ்ட்ரீஸ் ( Lumino Industries ) நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தை ( BSE ) மற்றும் தேசிய பங்குச் சந்தை ( NSE ) பங்குச் சந்தைகளில் வெளியீட்டு விலையான 82 ரூபாயை விட 34 சதவீதம் வரை கூடுதல் லாபத்துடன் (பிரீமியம்) பட்டியலிடப்பட்டன. பிஎஸ்இ சந்தையில் லுமினோ இண்டஸ்ட்ரீஸ் பங்கு 109 ரூபாய்க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது. இது வெளியீட்டு விலையை விட ரூ. 27 அல்லது 32.93 சதவீதம் கூடுதலாகும். அதேபோல, என்எஸ்இ சந்தையில் இப்பங்கு 34.15 சதவீதம் உயர்ந்து 110 ரூபாய்க்கு பட்டியலிடப்ப்பட்டது. பிஎஸ்இ சந்தையில் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு (Market Capitalisation) ரூ. 3,319.64 கோடியாக இருந்தது.
லுமினோ இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ சந்தா விவரங்கள்!
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த ஐபிஓ வெளியீட்டு காலத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. பங்கு விலை மனுக்கள் 120 மடங்குகளுக்கு மேல் பெறப்பட்டன. விற்பனைக்கு வைக்கப்பட்ட 6,01,21,950 பங்குகளுக்கு எதிராக மொத்தம் 7,45,63,86,028 பங்களுக்கான ஏலங்கள் பெறப்பட்டன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு முன்பு, அதிகாரப்பூர்வமற்ற சந்தையில் (Grey Market) இதன் மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. இதன் கிரே மார்க்கெட் ப்ரீமியம் (GMP) ரூ. 38 ஆக இருந்தது. இது 46.34 சதவீதம் வரை கூடுதல் லாபம் கிடைக்கலாம் என்பதைக் காட்டியது.
இந்த ஜிஎம்பி மதிப்பின் அடிப்படையில், வெளியீட்டு விலையான 82 ரூபாய்க்கு பதிலாக இப்பங்கு சுமார் ரூ. 120 வரை பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இந்த ஜிஎம்பி விலையே தொடர்ந்திருந்தால் 182 பங்குகள் கொண்ட ஒரு லாட் (Lot) மூலமாக ஒரு முதலீட்டாளருக்கு தோராயமாக ரூ. 6,916 லாபம் கிடைத்திருக்கும். மூன்று நாள் சந்தா காலம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, ஐபிஓ ஒதுக்கீட்டுப் பணிகள் தொடங்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்குப் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதலீட்டாளர்கள் தங்களுக்குப் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை என்எஸ்இ, பிஎஸ்இ அல்லது பங்குப் பதிவாளரான பிக்சேர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Bigshare Services Pvt Ltd) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
லுமினோ இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ பற்றிய விவரங்கள்!
லுமினோ இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ என்பது ரூ. 700 கோடி மதிப்பிலான புக்-பில்ட் (Book-built) வெளியீடாகும். இதில் 6.10 கோடி புதிய பங்குகளும், 2.44 கோடி பங்குகளை விற்பனை செய்யும் சலுகையும் (OFS) அடங்கியுள்ளன. இந்த ஐபிஓ-வின் இறுதி வெளியீட்டு விலை ஒரு பங்குக்கு ரூ. 82 என நிர்ணயிக்கப்பட்டது. ஒரு விண்ணப்பத்திற்கான லாட் அளவு 182 பங்குகளாகும். இதன் மூலம் ஒரு சில்லறை முதலீட்டாளர் குறைந்தபட்சம் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூ. 14,924 ஆகும்.
Disclaimer:
இங்கே வழங்கப்பட்டுள்ள செய்தி தகவல் நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதை எந்தவொரு முதலீட்டு அறிவுரையாகவும் கருதக்கூடாது. எந்தவொரு நிதி சார்ந்த முடிவை எடுப்பதற்கும் முன்பாக உங்களுடைய நிதி ஆலோசகரிடம் சரியான ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது அபாயம் நிறைந்தது.
