சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் அவையில் அனைவரும் பேச அனுமதி அளிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். பேரவையில் விவாதம், சண்டை என்றே செல்கிறது. மக்களின் பிரச்சனையை பேச முடியவில்லை என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளையும் விட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்றைய தினம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் 2 மணி நேரம் பேசினார் என்றார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது உதயநிதி உடனடியாக குறுக்கிட்டு பதில் அளித்ததும், அதற்கு சபாநாயகர் அடித்த கமெண்ட்டும் வைரலாகி வருகிறது.
சட்டமன்றத்தில் இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக காரசாரமான வாதங்களை முன்வைத்தார். இதற்கு ஆளுங்கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உதயநிதி பேசும்போது குறுக்கிட்டனர். அப்போது திமுக உறுப்பினர்களும் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் உரையை நிறைவு செய்வதற்கு கூடுதல் நேரமானது.
இதனை தன்னுடைய உரையின் போது தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டு பேசினார். அதாவது, பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது சரியாக இரண்டு மணிநேரம் ஒரு சப்ஜெக்ட் தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆக்சுவலி இன்னைக்கு காவல்துறை மானியத்தில் அண்ணன் எடப்பாடியார் உட்பட 13 இங்க பேசுறாங்க. லிஸ்ட் கையில் இருக்கு. இதுவரைக்கு தம்பி உதயநிதி மட்டும்தான் பேசியுள்ளார் என்பது என்னுடைய கருத்து.
அதுனால நீங்க பேசுறது தவறு. அவர் பேசுவது தவறு என்பதை பேசுவதற்கு இங்க வரவில்லை என்றார். அப்போது உதயநிதி ஸ்டாலின் குறுக்கிட்டு, சட்டமன்ற உறுப்பினர் அக்கா பிரேமலதா விஜயகாந்த் 2 மணிநேரம் உதயா பேசுனார் என்று சொல்லி இருக்கிறார். நான் வெறும் 25 நிமிடம்தான் பேசி இருக்கேன் என்பதை இந்த அவையில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என சொல்லி சிரித்தார். அதனை தொடர்ந்து அவைத்தலைவர் 35 நிமிஷம் பேசி இருக்கீங்க என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
இதனால் அவை கலகலப்பாக மாறியது. தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவர் பேச துவங்கி 2 மணிநேரம். அதில் அவர் பேசியது 35 நிமிடம். மீது நேரம் எல்லாம் இங்க விவாதம் மட்டும்தான் நடந்துள்ளது என்பது தான் என்னுடைய கருத்து என்று தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த். இந்த கலகலப்பான வாதம் சோஷியல் மீடியாவில் வெளியாகி கவனம் பெற்று கொண்டிருக்கிறது.
