lord krishna worship for fertility கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை பாக்கியம் பெற செய்ய வேண்டிய வழிபாடுகள்

கிருஷ்ண ஜெயந்தி என்பது மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாளாகும். எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் தர்மத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார் என புராணங்கள் சொல்கின்றன. அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர் வழிபாடு :

பொதுவாகவே கிருஷ்ண வழிபாடு என்பது மிகவும் எளிமையான வழிபாடு ஆகும். விலை மதிப்பில்லாத பரிசுப் பொருட்களுடன் தன்னை காண்பதற்காக காத்திருந்தவர்கள் அனைவரையும் கண்டுகொள்ளாமல், தன் மீது தூய்மையான அன்புடன் தனக்காக ஒரு கைப்பிடி அளவு அவலை கொண்டு வந்த குசேலரை தான் கண்ணன் ஓடி வந்து அணைத்துக் கொண்டார். அவர் கொடுத்த ஒரு பிடி அவலை சாப்பிட்டு, அவருக்கு தனது அருளையும், வேண்டிய அனைத்து செல்வங்களையும் கொடுத்து வாழ வைத்தவர் கண்ணன். குசேலரை போல் தூய்மையான அன்புடன் பக்தி செய்து வழிபட்டால் கண்ணனின் அருளை பெற முடியும்.

பகவான் கிருஷ்ணரின் அருளை பெறுவதற்காக அனைவரும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, கண்ணனை வேண்டி வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் செய்வது உண்டு. இருந்தாலும் இந்த நாளில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனதார விரதம் இருந்து கண்ணனிடம் முறையிட்டால், அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்து, பலரும் குழந்தை பாக்கியம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நாளில் சந்தான கோபால கிருஷ்ணரை வழிபடுவதும், குழந்தைகளுக்கு இனிப்பு போன்ற உணவுகள் தானமாக அளிப்பதும் நம்முடைய கர்மவினைகளை நீக்கி, அதிக நன்மைகளை தரும். இந்த நாளில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை கிருஷ்ணரை எப்படி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை பாக்கியம் பெற கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு :

1. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ள ‘தசம ஸ்காந்தம்” படித்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

2. இந்த நாளில் முறையாக விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான, புத்திக்கூர்மையுள்ள குழந்தை பிறக்கும் என்றும், குழந்தைகள் உள்ளவர்களுக்கு குழந்தைகளின் அறிவு மேம்படுவதோடு நற்சிந்தனையும் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

3. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புத்தி, யுக்தி, அறிவு ஆற்றல், ஆயுள், ஆரோக்கியம் மிக்க நற்புத்திர பாக்கியத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திரத்தடை போன்றவை நிவர்த்தியாகி சற்புத்திர பாக்கியத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

4. கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை கணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானதாகும். பகற்பொழுது உபவாசம் இருந்து இரவில், கண்ணனது திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும்.

5. குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள், பூஜை செய்யும் கிருஷ்ணர் படம் அல்லது கிருஷ்ணர் பொம்மையை மடியின் மீது வைத்துக் கொள்வார்கள். இப்படிச் செய்வதால் மழலைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொள்பவர்கள், பூஜை முடிந்ததும் கொஞ்சம் பால் அல்லது பால் பாயசத்தை கிருஷ்ணருக்கு ஊட்டி விடுவது போல் பாவனை செய்துவிட்டு அந்தப் பிரசாதத்தை தம்பதியர் அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதால் கிருஷ்ணரது அருளால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

6. கிருஷ்ணரின் மந்திரங்களை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லலாம். வேறு எந்த மந்திரமும் தெரியாதவர்கள். “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே” என்ற மந்திரத்தையோ அல்லது “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தையோ 108 முறை மனதார சொல்லி வழிபடுவது சிறப்பு.

கண்ணன் என்பது கிருஷ்ணருக்கு இன்னொரு செல்லப் பெயர் என்று சொல்வார்கள். நாம் பிறவிப்பயனை அடைவதற்கு ‘சகலமும் நானே, சர்வம் கிருஷ்ணார்ப்பனமஸ்து” என்று அருள்வாக்குச் சொன்னவன் கிருஷ்ணன். நான்கு திருக்கரங்களுடன் பிறந்த கிருஷ்ணன், நான்கு வேதங்களுக்கும் நாயகனாக விளங்குகின்றான். கருமை நிறத்துடன் பிறந்த கிருஷ்ணன், மூன்று உலகங்களுக்கும் ஞான ஒளி காட்டும் தீப பிரகாச வண்ணனாகக் காட்சி அருளுகின்றான்.

Source link