தமிழ்நாடு, கேரளம், புதுவை, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் அடுத்த மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கேரளம், புதுவை மற்றும் அசாம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த முறை வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட நிலையில், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டுமெனக் காங்கிரஸ் தீவிரமாகத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பாஜகவும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதாகவும், அருணோதய் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான ஹிமந்தா பிஷ்வா சர்மா, ” அசாமைப் பிரகாசமான மாநிலமாக மாற்றுவதே எங்கள் இலக்கு. உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைப் போல் அசாமிலும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும். குறிப்பாக, அசாமில் 6 வது அட்டவணையின் கீழ், பழங்குடியின பகுதிகளைத் தவிர்த்துப் பிற இடங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும். அசாமை வெள்ள பாதிப்பு ஏற்படாத மாநிலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வளர்ச்சிக்காக முதல் இரண்டு ஆண்டுகளில் ரூ.18000 கோடி செலவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
