பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம்; கேரளத்தில் காங்கிரஸ் அதிரடி வாக்குறுதிகள்

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இந்த இரு கூட்டணி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதனிடையே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில், “கேரள பெண்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் நாங்கள் பாதுகாப்போம். ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் கொண்டுவரப்படும். அதே போல, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். 

முதியோர் ஓய்வூதியம் ரூ.3000 வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.5 லட்சம் வரையில் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். உம்மன்சாண்டி மருத்துவத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படும்” என்று தெரிவித்தார். இந்த திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கேரள அரசியலில் இந்த திட்டங்கள்  பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஆளும் கட்சியான இடதுசாரி கூட்டணியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கும் முன்பாக மூத்த தலைவர் சசி தரூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Source link