சென்னை; இலவசத்தை தேர்தல் வாக்குறுதிகள் என்று அறிவித்து என் மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபத்துடன் கூறினார்..
சென்னை விமானநிலையத்தில் அவர் அளித்த பேட்டி;
தேர்தல் வாக்குறுதி என்று சொல்லாதீர்கள். அது இலவச அறிவிப்பு. வாக்குறுதிக்கு அப்போது என்ன பெயர்? கல்வி, மருத்துவம், குடிநீரை இலவசமாக தருகிறேன், மற்ற எதையும் தரவில்லை, நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை தொடங்கி அனைவருக்கும் உங்கள் வாழ்விடத்திலேயே வேலை தருகிறேன் என்று நான் சொல்வது தான் வாக்குறுதி.
ஆனால் நீங்கள் தருவது வெற்று ஏமாற்று அறிவிப்பு. வங்கியில் ரூ.10000 தருகிறேன், கல்விக்கு ரூ.20 லட்சம் கடன் தருகிறேன் என்று சொல்கிறீர்கள். நீங்கள் என்ன கந்துவட்டி கடை நடத்துகிறீர்களா? இல்லை வங்கி வைத்திருக்கிறீர்களா?
கல்வி என்பது மக்களின் உரிமை. அதை அரசு கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் கடன் தருகிறேன் என்றால் வட்டிக்கடையா வைத்திருக்கிறீர்கள்? பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டியது ஒரு நாட்டின், ஒரு அரசின் கடமை. அதற்கு ஏன் நீங்கள் கடன் தருகிறீர்கள்?
நான் ரூ.2000 தருகிறேன் என்கிறார் ஒருவர். நான் ரூ.2500 கொடுக்கிறேன் என்கிறார் இன்னொருவர். ஒருத்தர் 3 சிலிண்டர் தருகிறேன், மற்றொருவர் 6 சிலிண்டர் தருகிறேன் என்கிறார். இதை எல்லாம் எங்கிருந்து கொடுப்பார்கள்? ஏன் என் மக்களை இப்படி எல்லாம் ஏமாற்றி நாட்டை விற்று ஏலம் போடுகிறீர்கள்?
நீங்கள் அறிவித்துள்ள இந்த இலவச திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் இன்னும் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டும். அதற்கு வட்டி எவ்வளவு வரும்? நாட்டின் மொத்த பட்ஜெட்டே ரூ.3 லட்சம் கோடி தான்.
இலவசமாக ரூ.10,000 கொடுப்பீர்கள், அந்த காசை எங்கிருந்து எடுப்பீர்கள், எங்கிருந்து கொண்டு வருவீர்கள்? என் மக்களை, மண்ணை அடமானம் வைத்து கடன் வாங்குவீர்கள். என் அப்பா வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்குவது போல், நீங்கள் நாட்டை வைத்து கடன் வாங்குவீர்கள்? இதற்கு எதற்கு ஒரு தலைவன்.
இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.
