ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கடந்த மாதம் இறுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமெனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களுடன் சேர்ந்து, முக்கிய படைத் தளபதிகளும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த இருதரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், இந்த போர் ஒரு மாதமாக முடிவு பெறாமல் நடைபெற்று வருகிறது.
இந்த போர்ப் பதற்ற சூழலில், ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து உற்பத்தியாகும், கச்சா எண்ணெய் வர்த்தகம் இந்த பாதை வழியே நடந்துவந்தது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு, இந்த பாதை வழியே நடை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த பாதை மூடப்பட்டுள்ளதால், 2000 க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் ஹார்மோஸை கடக்க முடியாமல் தத்தளித்து வருகின்றன.
இதன் விளைவாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. அதனால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகள், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதில் தெற்காசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவிற்கான 40 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 90 திரவ எரிவாயு இந்த பாதை வழியே கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த நீரிணை பாதையில் சுங்க கட்டணம் வசூலிக்க இருப்பதாக முன்னதாக ஈரான் அறிவித்திருந்தது. இதனிடையே, தற்போது ஹார்மோஸ் பாதையைக் கடக்கும் கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க அந்நாட்டு பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதுகாப்பான பயணத்திற்காக இரண்டு கப்பல்கள் இந்த கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில், புவிசார் அரசியலைப் பொறுத்து ஹார்மோஸ் நீரிணையை, ஈரான் பொருளாதார அரசியல் புள்ளியாக மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
