“ஓபிஎஸ் துரோகம் செய்துவிட்டார்…” – ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வரும், அதிமுக மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வமும், ஐயப்பனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து, முதல்வர் உத்தரவின் பேரில், ஓ.பன்னீர்செல்வம் தென்மாவட்டங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துடன் உடன் திமுகவில் இணைந்த அவரது ஆதரவாளரான ஐயப்பனுக்கு இந்த தேர்தலில் திமுக வாய்ப்பளிக்கவில்லை.

அதாவது இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கி தருவதாக ஐயப்பனிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஐயப்பன் எம்.எல்.ஏவாக பதவி வகித்த உசிலம்பட்டி தொகுதியை, கூட்டணியில் அங்கம் வைத்துள்ள காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியதால் ஐயப்பன் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கேப்டனாக ஒரு தொண்டனை கரை சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் தவறிவிட்டார் என முன்னாள் எம்.எல்.ஏ ஐயப்பன் தனது ஆதரவாளர்களிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மதுரை உசிலம்பட்டியில் உள்ள தனது வீட்டில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் உடன் கடைசி வரை கூட இருந்த நிலையில் எனக்கு கை கொடுப்பார் என்று நம்பியிருந்த நிலையில் அவர் என்னை கைவிட்டுவிட்டார். அவர் எனக்கு  மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது அங்கிருந்த ஆதரவாளர்களில் ஒருவர் எழுந்து, ஓபிஎஸ்ஸிடம் இருந்து விலகியவர்கள் எல்லாம் இன்று சீட்டு வாங்கிவிட்டார்கள். உடனிருந்த உங்களை அவர் ஏமாற்றிவிட்டார் என ஆவேசமாகப் பேசினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஐயப்பன், “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் மூலம் தொண்டர்களை இணைத்து 3 ஆண்டு காலம் போராடிக் கொண்டிருந்தோம். இந்த வேளையில் நானும் ஓ.பி.எஸும் தாய்கழகமாக திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதே போல் எங்களது ஆதரவாளர்களும் திமுகவில் பணியாற்றி வருகிறார்கள். ஓபிஎஸ்ஸுடன் திமுகவில் இணையும் போது உசிலம்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டிருந்தேன். அதற்கு ஓபிஎஸ்ஸும் சம்மதித்தார். ஆனால் என்னவென்று தெரியவில்லை. உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் தலைவனாக ஒரு கேப்டனாக தொண்டரை கரை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் தொண்டரை கரை சேர்க்க அவர் தவறிவிட்டார். அது ஏன் என்று தெரியவில்லை. அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். இருப்பினும் கூட திமுக வெற்றிக்காக பாடுபடுவோம். திமுகவுக்கு பணி செய்ய எங்களுக்கு இன்னும் உத்தரவு வரவில்லை, உத்தரவு வந்ததும் தேர்தல் பணியைத் தொடங்குவோம்” என்று பேசினார். 

Source link