“ஆதிக்க சக்திகளின் அழுத்தம்…” – பதவி விலகிய திமுக ஒன்றிய செயலாளர்!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தால் பதவி விலகுவதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் திமுகவில் இருந்து பதவி விலகியுள்ளார். திருப்பத்தூர் மாதனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், ஒன்றிய குழு தலைவராகவும் சுரேஷ்குமார் என்பவர் பதவி வகித்து வந்துள்ளார். இவர் திமுக முன்னாள் எம்.பியும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான சண்முகத்தின் மகன் ஆவர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சுரேஷ்குமார் ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘நான் கடந்த பத்து ஆண்டுகளாக மாதனூர் மற்றும் குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய கழக செயலாளராக பணியாற்றி வருகின்றேன். இதுநாள் வரை தலைமைக் கழகத்திற்கும், மாவட்ட கழகத்திற்கும், கழக தோழர்களுக்கு உண்மையாகவும். நேர்மையாகவும் செயல்பட்டு வந்துள்ளேன். 75-ஆண்டு காலம் எனது தந்தையார் ப.சண்முகம், Ex.MP. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கழக செயலாளர் காலம் முதல் நான் கிளை கழக செயலாளர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், ஒன்றிய கழகச் செயலாளர், மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் கழகத்திற்கும், சமூகத்திற்கும் எவ்வித ஊறு வினைவித்திடாமல் மக்களிடையேயும், கழகத்தினரிடமும் அறம் சார்ந்தே செயல்பட்டுள்ளோம்.

சில ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பினை தொடர முடியாத காரணங்களினால் அப்பொறுப்பில் இருந்து என்னை விடுவித்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதுநாள்வரை என்னுடன் உழைத்திட்ட கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும், வணக்கங்களையும் தெரிவித்து விடைபெறுகின்றேன். மேலும் எனக்கு பல்வேறு பொறுப்புகளை அளித்திட்ட தலைமை கழகத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link