krishna Jayanti 2026 bhog கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு 2026: கண்ணனின் அருளை பெற இந்த 3 பொருட்களை படைக்க மறக்காதீர்கள்

“கண்ணா…” என்று அன்புடன் அழைக்கும் பக்தர்களுக்கு, கிருஷ்ணர் ஒரு கடவுளாக மட்டுமல்லாமல், தங்களுடைய வீட்டுக் குழந்தையாகவும், நண்பனாகவும், வழிகாட்டியாகவும், காப்பவனாகவும் இருக்கிறார். அந்த அன்பையும் பக்தியையும் கொண்டாடும் புனிதமான திருநாள் தான் “கிருஷ்ண ஜெயந்தி”. மகாவிஷ்ணுவின் அவதார மரபில் கிருஷ்ணரின் பிறப்பு, தர்மம் நிலைநிறுத்தப்படுவதற்காக இறைவன் அவதரிக்கும் தத்துவத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. பகவத் கீதையிலும் தர்மம் குறைந்து அதர்மம் பெருகும் காலங்களில் இறைவன் அவதரிப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார்.

அதனால் கிருஷ்ண ஜெயந்தி என்பது வெறும் பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. “தர்மத்தின் வழியில் நடப்போம்; இறை நம்பிக்கையை வளர்ப்போம்; நல்லதைச் செய்வோம்” என்ற ஆன்மிகச் செய்தியையும் நினைவூட்டும் நாள் ஆகும்.

புராண மரபின்படி, கிருஷ்ணர் மதுராவில் சிறையில், நள்ளிரவு நேரத்தில், தேய்பிறை அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்துடன் தொடர்புடைய நேரத்தில் அவதரித்ததாகக் கூறப்படுகிறது. அந்த நினைவாகவே ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜன்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 3 முக்கியமான பொருட்களை படைத்து வழிபடுவதால் கண்ணனின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என சொல்லப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று படைக்க வேண்டிய 3 பொருட்கள் :

1. பால், வெண்ணெய் – கிருஷ்ணருக்கு பல விதமான பலகாரங்கள் படைத்து வழிபட முடியாதவர்கள் எளிமையாக காய்ச்சிய பாலுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து படைக்கலாம். வசதி இருப்பவர்கள் பாதாம், முந்திரி போன்றவற்றை போட்டும் படைக்கலாம். அதே போல் ஒரு சிறிய கிண்ணத்தில் வெண்ணெய் வைத்து படைக்க வேண்டும். கண்ணனுக்கு மிக விருப்பமான பொருட்களில் பால், வெண்ணெய் என்பதால் அதை படைத்து வழிபடுவது சிறப்பு. கண்ணனுக்கு வெண்ணெய் படைப்பதற்கு, அவர் வெண்ணெய் திருடி உண்டவர் என்பது மட்டும் காரணமல்ல. மற்றொரு ஆழ்ந்த ஆன்மீக தத்துவமும் உள்ளது. வெண்ணெய் என்பது மக்களின் மனங்களில் இருக்கும் தீயவற்றை குறிப்பதால் அவற்றை கண்ணன் திருடியதாக ஒரு சொல் மரபு உண்டு. அது மட்டுமல்ல, பால் மற்றும் வெண்ணெய் இரண்டுமே அடுத்தடுத்த நிலைக்கு உயருமே தவிர, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாத குணம் கொண்டவை. பால் திரிந்தால் தயிராகும். அதை கடைந்தால் வெண்ணெய், அதிலிருந்து நெய் கிடைக்கும். ஒரு போதும் பாலாகவே மீண்டும் திரும்பாது. அதே போல் வெண்ணெயும் உருகினால் நெய்யாகுமே தவிர, மீண்டும் வெண்ணெய் அல்லது பால் நிலைக்கு திரும்பாது. அது போல் நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் மற்றவர்களுக்கு பயன்படும் உயர்ந்த நிலையை அடைந்து, இறுதியில் இறைவனை அடைவதே என்பதை உணர்த்துவதாகும்.
2. அவல் – கண்ணனுக்கு படைக்கப்படும் மிக எளிமையான பொருள் அவல். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானதாகும். குசேலர் கொடுத்த ஒரு பிடி அவலை ஏற்று, அவருக்கு அன்பு செய்ததால் கண்ணனின் நட்பு மற்றும் கருணை அனைவருக்கும் புரியும். கண்ணன் எளிமையின் வடிவமானவர் என்பதற்கும், தூய்மையான அன்பிற்கு மட்டுமே இறைவன் கட்டுப்படக் கூடியவர் என்பதற்கும் இதுவே உதாரணமாகும். அதனால் கண்ணனின் அருளை பெற அவருக்கு அவல் படைக்க வேண்டும். சர்க்கரை கலந்த அவல், அவல் பாயாசம், அவல் லட்டு என எப்படி வேண்டுமானாலும் படைக்கலாம். அவல், அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் என்றாலும், பல விதமான சோதனைகளை கடந்த பக்குவ நிலையின் அடையாளமாகும். அதே போல் இறைவனையும், அவரது அருளையும் அடைய வேண்டும் என்றால் நாமும் பக்குவ நிலையை அடைய பெற வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக தான் அவலை, கிருஷ்ணர் ஏற்றுக் கொண்டார்.

3. துளசி – ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைத்து, அதில் 2 துளசி இலைகளை போட்டு கண்ணனுக்கு படைக்க வேண்டும். இவை இரண்டுமே தூய்மை மற்றும் புனிதத்தின் அடையாளமாகும். துளசி மகாலட்சுமிக்கும் விருப்பமான பொருளாகும். துளசி தூய்மையான, தெய்வீகத்தின் அடையாளமாக கருதப்படுவதால் கிருஷ்ணர் இதை விரும்பி ஏற்கிறார். பல வகையான அலங்காரங்கள் செய்வதை விடவும், ஒரு துளசி மாலை அணித்து வழிபட்டால் கண்ணன் மனம் மகிழ்ந்து, அருளை வழங்கிடுவார் என கண்ணனே சொல்லி இருப்பதாக பாகவத புராணம் சொல்கிறது.

Source link