கரூர்: முதல்வரின் கட்டளையை ஏற்று கரூரில் இருந்து கோவை தொகுதிக்கு மாறியதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பிறகு நிருபர்களிடம் செந்தில் பாலாஜி கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கோவையில், 10 தொகுதிகளிலும் தி.மு.க., தோற்றது. எனவே, கடந்த லோக்சபா தேர்தல் முடிந்ததுமே, 2026 தேர்தலுக்கான பணியை துவக்கி விட்டோம்.
இம்முறை வெற்றி பெறவே, கோவையில் எனக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் நான் பயந்ததும் இல்லை; பின்னோக்கி சென்றதும் இல்லை. எனக்கு கரூர் வேறல்ல; கோவை வேறல்ல.
தி.மு.க.,வின் வெற்றி தொடரும். ஓட்டு எண்ணிக்கையின் போது, கோவை, யாருடைய கோட்டை என்பது தெரியவரும். நான் கரூரில் இருந்து அவரங்குறிச்சிக்கு சென்று தேர்தலில் நின்றபோது பயந்துகொண்டு சென்றேனா என்ன?தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்வதுதான் தொண்டனின் கடமை. முதல்வரின் கட்டளையை ஏற்று கரூரில் இருந்து கோவை தொகுதிக்கு மாறினேன்.
எந்த இடத்திலும் எனக்கு இது வேண்டும் என்று நான் கேட்கமாட்டேன். என்னை பொறுத்தவரை கரூரும், கோவையும் இரு கண்களைப் போல. கரூரில் இருந்து கோவைக்கான அரசுப் பணிகளை முன்னெடுத்து செய்திருக்கிறோம். இனி கோவையில் இருந்து கரூரை பார்த்துக் கொள்வோம். திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.
