தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 234 தொகுதிகளில் 70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி மீதமுள்ள 164 தொகுதிகளில் ஆளும் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. அந்த 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 28ஆம் தேதி அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சரான பழனியப்பன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக அவர், நேற்று சென்னையில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பழைய தருமபுரி வந்தார். அப்போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் என பலரும் அவருக்கு மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக வேட்பாளர் பழனியப்பனுக்கு பொன்னாடை அணிவித்தனர். இதையடுத்து அங்கு குவிந்திருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஒடசல்பட்டி, கூட்ரோடு, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம், தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில், திமுக மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் பிரபு ராஜசேகர், மாது, சக்திவேல், நெப்போலியன், சிவப்பிரகாசம், சரவணன், முத்துக்குமார், நகர செயலாளர்கள் மோகன், கெளதம், ஜெயச்சந்திரன், இளைஞரணிச் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
