தமிழ்நாடு, கேரளம், புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளம், புதுவை மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இந்த மூன்று மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் தவெக என மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால், மூன்று தரப்பினரும் போட்டிப்போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியக் குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரிக்கு இன்று வருகை தந்தார். அங்கு, கட்சியின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஏப்ரலில் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், புதுச்சேரியில் ஏற்கனவே ஜனநாயகக் கூட்டணி தான் ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ளது. ஆனாலும், இந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது. அங்கு விஜயின் தவெகவும் போட்டியிடுகிறது. எனவே, வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தலைமையிலான கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும். ஒருவேளை, தேர்தலில் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், விஜயுடன் பேசி கூட்டணி அமைத்து ஆட்சியமைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக எங்கள் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும், தேசிய அங்கீகாரம் கிடைக்கக் கட்சியை வலிமைப்படுத்தி வருகிறோம்” என்று கூறினார்.
