தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் தற்போது வரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாமலேயே உள்ளது. இதனால் இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் களத்திற்குச் செல்லாமல் தலைமை அறிவிக்கும் அறிவிப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னையில் (31-03-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஊழல் நிறைந்த திமுக அரசைப் பதவியிலிருந்து அகற்றவும், தோற்கடிக்கவும், முடிவுக்குக் கொண்டு வரவும் வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதிகமான ஊழல் நடந்ததற்கும், சட்டம் ஒழுங்கை மிக மோசமான நிலைக்கு தள்ளியதற்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் காரணம். இந்த ஆட்சியில் விவசாயிகள், மீனவர்கள், தமிழக இளைஞர்கள், தமிழகப் பெண்கள் என அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதா தமிழகத்திற்கு வழங்கியிருந்த நல்லாட்சி மீண்டும் மலர தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்தத் தேர்தல் தமிழக மக்களின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, நல்லாட்சியையும், தமிழ்நாட்டின் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறுதொழில்கள் மற்றும் மீனவர்களின் நல்ல நலனையும் மீட்டுக் கொண்டுவரப் போகிறது. நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக உழைக்கிறோம். நாங்கள் அனைவரும் மீண்டும் ஜெயலலிதா அரசின் பொற்காலத்தைக் காண வேண்டும் என்பதற்காக உழைக்கிறோம். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் தேர்வு குறித்து இன்று ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். ஓரிரு நாட்களில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இந்தத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுள்ளனர். முதல்வர் டெல்லியில் தன் சொந்தக் கூட்டணிக்கு எதிராகப் போராடுகிறார். ஆனால் அதிமுக – என்டிஏ ஒரு குடும்பமாக நாங்கள் எவ்வளவு சுமுகமாகச் செயல்பட்டோம் என்பதை நீங்கள் பார்த்தீர்கள், தொகுதிப் பங்கீடும் எவ்வளவு சுமுகமாக நடந்தது என்பதையும் நீங்கள் பார்த்தீர்கள்.
விஜய்க்கு தமிழ்நாட்டு மக்கள், அவர்களின் கலாச்சாரம் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் குறித்து எந்தப் புரிதலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கடந்த காலத்தில் பல குறைகள் தோன்றியுள்ளன, அவற்றை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளாக இருந்தனர். பல ஆண்டுகளுக்கு மேல மக்களுக்கு சேவை செய்த பிறகு அவர்கள் முதலமைச்சர் ஆனார்கள். அவர் கனவுலகில் வாழ்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் தன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர், ஆனால் அந்தப் பிரபலம் வாக்குகளைப் பெற்றுத் தருவதில்லை. விஜயகாந்த் விஷயத்திலும், கமல்ஹாசன் விஷயத்திலும் நாம் கண்டது போல, இது அவருக்கு ஒருவேளை சில வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடிய மற்றுமொரு முயற்சியாக இருக்கும். ஆனால் அவர் தமிழ்நாட்டில் மூன்று அல்லது நான்கு இடங்களைக் கூட தாண்டுவார் என்று நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
