ஓபிஎஸ், என்னை ஏமாற்றி விட்டாரே? திமுக,வுக்கு தாவிய 'மாஜி' வேதனை

மதுரை: ‘முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ‘சீட்’ பெற்றுத் தராமல் என்னை ஏமாற்றி விட்டார் என முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் குற்றம் சாட்டினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்த அய்யப்பன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர். சட்டசபையில், முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். தி.மு.க.,வில் ஓபிஎஸ் சேர்ந்தபோது, அய்யப்பனும் அக்கட்சியில் இணைந்தார்.

தனக்கு மீண்டும் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட, தி.மு.க., சார்பில் ‘சீட்’ கிடைக்கும் என காத்திருந்த நிலையில், அந்த தொகுதியை, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தி.மு.க., கொடுத்து விட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அய்யப்பன், செக்கானுாரணி அருகே தன் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது, அய்யப்பன் கூறியதாவது:

கடைசி வரை கூட இருந்த எனக்கு, ஓபிஎஸ் கை கொடுப்பார் என நம்பினேன். தி.மு.க.,வில் இணையும் போது உசிலம்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டேன். அவரும் சம்மதித்தார்.

எம்.எல்.ஏ.,வாக இருந்து, அவருடன் தி.மு.க.,வில் இணைந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு மீண்டும் ‘சீட்’ கொடுத்துள்ளனர்.

ஆனால், எனக்கு ‘சீட்’ தராமல், காங்கிரசுக்கு உசிலம்பட்டி ஒதுக்கப்பட்டது. ஒரு கேப்டனாக, தொண்டனை கரை சேர்க்க, ஓபிஎஸ் தவறி விட்டார். ஆதரவாளர்களோடு ஆலோசித்து நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link