தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அக்கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கொளத்தூரை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து வில்லிவாக்கம் தொகுதியில், விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடபட இருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. விஜய்யின் பரப்புரைக்கு சரியான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும் திமுகவுக்கு ஆதரவாக சில அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்வதாகவும் தவெகவினர் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா இன்று (31-03-26) வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா தலைமையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத், வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அங்கு கூடியிருந்த பெண்கள் மீது மர்ம நபர்கள் சிலர் கண்ணாடி பாட்டில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு தவெக பெண் நிர்வாகி ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
