தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர நாதக, தவெக ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட நேற்று (30-03-26) வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், பெரம்பூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கொளத்தூரை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால், கொளத்தூர் தொகுதியில் இருந்து வில்லிவாக்கம் செல்வதற்காக வாகனத்தில் விஜய் சென்று கொண்டிருந்த போது ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், விஜய்யின் வாகனத்தை ஏராளமான தொண்டர்கள் சுற்றியதால் வாகனம் நகர முடியாமல் வெகு நேரம் மெதுவாகவே சென்று கொண்டிருந்தது.
இதனையடுத்து, பாதுகாப்பு காரணமாக விஜய்யின் வில்லிவாக்கம் தேர்தல் பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டது. விஜய்யின் பரப்புரைக்கு சரியான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும் திமுகவுக்கு ஆதரவாக சில அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்வதாகவும் தவெகவினர் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் திருச்சியில் ஏப்ரல் 2ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டுவதற்காக நாளை மறுநாள் (02-04-26) வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட 4 இடங்களுக்கு பிரச்சாரம் செய்ய காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதி கேட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
