கவுகாத்தி: ராஜஸ்தான் அணியின் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி பட்டையை கிளப்புகிறார். நேற்று முன் தினம் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் சென்னை பந்துவீச்சை சிதறடித்தார். 15 பந்தில் அரைசதம் விளாசி, வெற்றி நாயகனாக ஜொலித்தார்.
இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறுகையில், ”சூர்யவன்ஷி துணிச்சலாக பேட் செய்தார். மாட் ஹென்றி, கலீல் அஹமது, அன்ஷுல் கம்போஜ், ‘சுழல் மாயாவி’ நுார் அகமது என சென்னை அணியில் நான்கு உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் ஒருகை பார்த்தார். பந்துகளை நன்கு ‘ஸ்விங்’ செய்யும் கலீல் தடுமாறினார். சூர்யவன்ஷியை கட்டுப்படுத்த பல யுக்திகளை கையாண்டார். ஒன்றும் பலன் அளிக்கவில்லை. இந்த சீசனை அற்புதமாக துவக்கி இருக்கிறார் சூர்ய வன்ஷி,” என்றார்.
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
கவுகாத்தி: சென்னை அணிக்காக விளையாடிய ரவிந்திர ஜடேஜா, இம்முறை ராஜஸ்தான் அணிக்கு மாறியுள்ளார். சென்னை அணி மீது தொடர்ந்து அன்புடன் இருக்கிறார். கவுகாத்தி அரங்கில் இருந்த சென்னை ரசிகர்கள், இவரை ‘ஜட்டு’ என செல்லமாக அழைத்த போது, கண் கலங்கினார். போட்டி முடிந்ததும் கலீல் அகமது ‘ஜெர்சி’யில் இருந்த சென்னை அணியின் ‘லோகோ’வை முத்தமிட்ட தருணம் நெகிழ்ச்சியானது.
ஜடேஜா கூறுகையில்,”12-13 ஆண்டுகள் விளையாடிய சென்னை அணியை பிரிந்த போது கடினமாக இருந்தது. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டேன். இது வாழ்க்கையின் ஒரு பகுதி என தேற்றிக் கொண்டேன். இப்போது ‘பிங்க்’ நிற ஜெர்சி பிடித்திருக்கிறது,”என்றார்.
அறையில் திடீர் மரணம்
அதிர்ந்த மும்பை போலீஸ்
மும்பை: கிரிக்கெட் லீக் தொடரை ஒளிபரப்பும் குழுவில் இன்ஜீனியராக பணியாற்றினார் பிரிட்டனை சேர்ந்த ஜான் வில்லியம் லாங்போர்டு, 76. கடந்த மார்ச் 29ல் மும்பை-கோல்கட்டா போட்டி முடிந்த பின், ஓட்டல் திரும்பினார். நேற்று முன் தினம் இவரை ஓட்டல் ஊழியர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். பதில் எதுவும் அளிக்காததால், வேறு சாவி பயன்படுத்தி அறையை திறந்தனர். அப்போது சுயநினைவின்றி இருந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மும்பை மரைன் டிரைவ் பகுதி போலீசார் கூறுகையில்,”போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் மரணத்தில் சந்தேகம் எதுவும் எழுப்பப்படவில்லை. இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரிக்கிறோம்,”என்றனர்.
கிரிக்கெட் லீக் தொடர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,’லாங்போர்டு மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். இவரது குடும்பத்திற்கு தேவையான உதவி அளிக்கப்படும்,’என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்டிராஸ்
* ஜூனியர் பெண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் இன்று ராஞ்சியில் துவங்குகிறது. இந்தியா முழுவதும் மூன்று ‘டிவிசனில்’ இருந்து 29 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
* ஆசிய கோப்பை கால்பந்து தொடர் (17 வயதுக்கு உட்பட்டோர்) வரும் மே 7-24ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்தியா, தாய்லாந்து அணிகள் நட்பு போட்டியில் மோதின. தாய்லாந்தில் நடந்த இப்போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
* இந்திய நீர்ச்சறுக்கு (‘சர்பிங்’) கூட்டமைப்பு சார்பில் தேசிய சர்பிங் சாம்பியன்ஷிப் அந்தமான் அண்டு நிகோபார் தீவுகளில் வரும் ஏப்., 9 முதல் 12 வரை நடக்க உள்ளது.
* அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் 7வது சீசன் வரும் ஜூலை மாதம் கோவாவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்ற சென்னை லயன்ஸ் அணிக்குப் பதில், இம்முறை உ.பி., அணி இணைந்துள்ளது. 7 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் போட்டி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
* உலக வில்வித்தை அமைப்பு சார்பில், கடந்த ஆண்டின் சிறந்த பாரா வில்வித்தை நட்சத்திரமாக, இரு கைகள் இல்லாத ஷீத்தல் தேவி தேர்வானார். அவர் கூறுகையில்,” பொதுவாக யாரிடமும் எந்த குறையும் கிடையாது. சற்று கூடுதல் முயற்சி இருந்தால் போதும், சாதித்து விடலாம். உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும்,” என்றார்.
* மும்பையில் அகில இந்திய செஸ் மாஸ்டர்ஸ் தொடர் 3வது சீசன் நடக்கிறது. இதில், மபாரா, யாத்னிக், தண்டேகர் உள்ளிட்டோர் தொடர்ந்து நான்காவது சுற்றில் வெற்றி பெற்று, முன்னிலையில் உள்ளனர்.
* பாகிஸ்தானில் நடக்கும் லீக் தொடரில் பந்தின் தன்மையை மாற்ற முயன்ற, லாகூர் அணிக்காக பங்கேற்கும் பகர் ஜமான், இரு போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தடை விதித்தது.
