ரத்த அலகுகள் கையிருப்பு தெரிவிக்க உத்தரவு

சென்னை: நாட்டில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளும், தங்கள் கையிருப்பில் உள்ள ரத்த அலகுகள் மற்றும் ரத்த கூறுகளை, ‘இ – ரக்த்கோஷ்’ இணையதளத்தில் பதிவு செய்வதை, மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து ரத்த வங்கிகள், சேமிப்பு நிலையங்களை கண்காணித்து, ஒழுங்குபடுத்துவதற்கான ஒழுங்குமுறை கூட்டம், மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில், சமீபத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் உள்ள ரத்த வங்கிகள் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இருப்பில் உள்ள ரத்த அளவுகளின் விபரங்களை, துல்லியமாக அறிந்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, மாநில அளவிலான சுகாதார அதிகாரிகள், அங்கீகாரம் பெற்ற அனைத்து ரத்த வங்கிகளையும், மத்திய அரசின், ‘இ – ரக்த்கோஷ்’ என்ற இணையதளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, ரத்த அலகுகள் கையிருப்பு மட்டுமல்லாது, ரத்த கூறுகளின் இருப்புகளையும், உடனுக்குடன் பதிவு செய்வது கட்டாயம்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும். இதன் வாயிலாக, மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ரத்தம், ஆக்கப்பூர்வமாக உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய முடியும்.

மேலும், அவசர நேர ரத்த தேவைகளினால், நோயாளிகளையும் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link