புதுடில்லி: விவசாய உற்பத்திப் பொருட்கள் உட்பட பல இந்தியப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் பரஸ்பர வரி விலக்கு

புதுடில்லி: விவசாய உற்பத்திப் பொருட்கள் உட்பட பல இந்தியப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் பரஸ்பர வரி விலக்கு அளிக்கப்படும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான அடிப்படையான விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, டில்லியில் வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் நிருபர்களிடம கூறியதாவது:

விவசாயப் பொருட்கள் உட்பட பல இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் பரஸ்பர வரி விலக்கு அளிக்கப்படும். சில பழங்கள், காய்கறிகள், தேநீர், காபி ஆகியவற்றுக்கு அமெரிக்காவில் பரஸ்பர வரி எதுவும் விதிக்கப்படாது. இந்திய பொருட்கள் ஏற்றுமதியை அமெரிக்கா விரும்புகிறது.

விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு பெரிய சந்தையில் பொருட்களை விற்கும் வாய்ப்பை இந்திய வர்த்தகர்கள் பெறுவார்கள். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான பயணத்தில் இன்று முக்கியமான நாள். 30 டிரில்லியன் டாலர் சந்தை ஏற்றுமதிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரியில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அண்டை நாடுகளிலும் விட மிகக் குறைவாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் இரு தரப்பு வர்த்தகத்தை அடைய வேண்டும்.

எதிர்காலத்தை மனதில் கொண்டு இரு நாடுகளின் உறவுகள் மற்றும் இருநாட்டு தலைவர்களின் இடையிலான நட்பை கருத்தில் கொண்டு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதங்கள் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. இந்த இலக்கை அடைவதற்கான இன்றைய நாள் பொன்னெழுத்துக்களால் எழுதப்படும்.

நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை வீசுகிறது. எதிர்காலம் குறித்து நாட்டின் ஒவ்வொரு துறையிலும் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. வரும் நாட்களில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தமிழகம் போன்ற மாநிலங்களில் உற்பத்தியாகும் வைர நகைகளுக்கு அமெரிக்காவில் வரி கிடையாது. வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.

Source link