புதுடில்லி: மத்திய அரசு, வியூக முக்கியத்துவம் வாய்ந்த 11 சுரங்க தொகுதிகளுக்கான ஏலத்தை ரத்து செய்துள்ளது. முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாததால், இவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுரங்க அமைச்சகம் கூறியுள்ளதாவது:
ஐந்து சுரங்க தொகுதிகளை கேட்டு ஏலதாரர்கள் யாரும் வரவில்லை. இதர 5 சுரங்க தொகுதிகளுக்கு, தொழில்நுட்ப தகுதி வாய்ந்த ஏலதாரர்கள் மூன்று பேருக்கும் குறைவாகவே இருந்ததால், ஏலம் ரத்து செய்யப்படுகிறது. இதுதவிர, மேற்கு வங்கத்தில் உள்ள ‘பேகு’ அரிய வகை தாது தொகுதிக்கான ஏல நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய வினியோக தொடர் குழப்பங்கள் நிலவும் இச்சூழலில், உள்நாட்டிலேயே முக்கிய கனிமங்களை ஆய்வு செய்து உற்பத்தி செய்வது என்ற மத்திய அரசின் முயற்சிக்கு இது ஒரு பின்னடைவாகவே பார்க்கப் படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் 13 மாநிலங்களில் உள்ள 23 முக்கிய கனிம தொகுதிகளுக்கான 6 வது கட்ட ஏல நடைமுறைகளைத் துவங்கியது. இவற்றில் மொத்தம் 23 கனிம தொகுதிகளில் 11 தொகுதிகளுக்கான ஏலம் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த ஏலங்களில், வியூக ரீதியில் முக்கியமான 46 சுரங்கத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன என்று அமைச்சகம் கூறியுள்ளது.
