பிரிட்டோரியா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 2028ல் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. இதில்,’ பெண்களுக்கான போட்டிகளில் திருநங்கைகளை அனுமதிக்கக் கூடாது,’ என தெரிவித்து இருந்தார். இதை ஏற்ற, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.ஏ.,), பெண்கள் பிரிவில் சமமான போட்டிகளை உறுதி செய்யும் வகையில், ‘பெண்களுக்கான தகுதியை நிர்ணயிக்க, மீண்டும் மரபணு சோதனை நடத்தப்படும்,’ என தெரிவித்தது.
இதற்கு தென் ஆப்ரிக்காவின் கேஸ்டர் செமன்யா 35, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர், பாலின வளர்ச்சி வேறுபாடு இருந்தாலும், பெண்களுக்கான போட்டிகளில் பங்கேற்பது தனது உரிமை என நீண்ட காலமாக சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். லண்டன் (2012), ரியோ (2016) ஒலிம்பிக் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவர் கூறுகையில்,” பெண்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும் போது, எங்கள் தோற்றம், குரல், உடல் உறுப்புகள் ஏன் தடையாக இருக்க வேண்டும். இதுகுறித்து துணிச்சலாக குரல் கொடுப்போம். ஓய மாட்டோம்,” என்றார்.
