'மேக்னம்' ஐஸ்கிரீம் வசமானது 'குவாலிட்டி வால்ஸ்' இந்தியா

புதுடில்லி: ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ‘குவாலிட்டி வால்ஸ்’ நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை, நெதர்லாந்தை சேர்ந்த ‘தி மேக்னம் ஐஸ்கிரீம் கம்பெனி’ வாங்கியுள்ளது.

கடந்த மார்ச் 30ம் தேதி இந்த பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாறுவதாகவும், பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குவாலிட்டி வால்ஸ் தெரிவித்துள்ளது. இதுநாள் வரை உரிமையாளராக இருந்த யுனிலீவர் குழும நிறுவனங்கள், பொது பங்குதாரர்களாக வகைபடுத்தப்படுவதாகவும்; மேக்னம் ஐஸ்கிரீம் புதிய உரிமையாளராக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தின்படி இந்த கையகப்படுத்தல் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, குவாலிட்டி வால்ஸ் இந்தியாவின் 145.44 கோடி பங்குகள், அதாவது 61.90 சதவீத பங்குகளை மேக்னம் ஐஸ்கிரீம் வாங்கியுள்ளது.

குவாலிட்டி வால்ஸ் இந்தியா நிறுவனம், அண்மையில் தான் ‘ஹிந்துஸ்தான் யுனிலீவர்’ நிறுவனத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, பங்குச் சந்தையில் தனியாக பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link