சிவகாசி: ”போதை ஆசாமிகளால் போலீஸ் துறைக்கே பாதுகாப்பு இல்லை, போலீசாரையே அடிக்கின்றனர்,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர்கள் ராஜேந்திரபாலாஜி – சிவகாசி, ராஜவர்மன் – திருச்சுழி, சந்திரபிரபா -ஸ்ரீவில்லிபுத்துார், சேதுபதி – அருப்புக்கோட்டை, கணேசன் – விருதுநகர் மற்றும் த.ம.மு.க., வேட்பாளர் பிரிசில்லா – ராஜபாளையம் ஆகியோரை ஆதரித்து சிவகாசியில், பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
காவிரி – குண்டாறு திட்டத்தின் வாயிலாக கால்வாய் வெட்டி, மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு வந்தால், வறண்ட மாவட்டமான விருதுநகர் செழுமையாகும்.
இதற்காக, 14,000 கோடி ரூபாயில் திட்டத்தை துவக்கினேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இத்திட்டத்தை தி.மு.க., அரசு முடக்கியுள்ளது. நாங்கள் 11 மருத்துவக் கல்லுாரிகளை கொண்டு வந்தோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லுாரியையாவது தி.மு.க., அரசு கொண்டு வந்ததா?
கையாலாகாத பொம்மை முதல்வர் ஆள்வதால், சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கஞ்சா விற்பவர்களுக்கு தி.மு.க.,வினர் துணை நிற்கின்றனர்.
போதை ஆசாமிகளால் போலீஸ் துறைக்கே பாதுகாப்பு இல்லை. போலீசாரையே எகிறி அடிக்கின்ற னர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும்.
ஊழல் செய்வதில் தான் தி.மு.க., ஆட்சி முதன்மையாக உள்ளது. ஊழலின் ஊற்றுக்கண் தி.மு.க., ஊழலையும் தி.மு.க.,வையும் பிரிக்க முடியாது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் நேரு மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2020-21ல் கிடைத்த வரி வருவாயை விட 2024-25ல் ஒரு லட்சத்து 36,௦௦௦ கோடி ரூபாய் கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், எந்த புது திட்டமும் வரவில்லை. அப்படியென்றால் வரிப்பணம் எங்கே போனது?
இவ்வாறு அவர் பேசினார்.
