புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நெருங்கும் நிலையிலும், அம்மாநில முதல்வர் ரங்கசாமி, டென்சன் இல்லாமல் டென்னிஸ் விளையாட்டில் ‘பிஸியாக’ இருக்கிறார்.
புதுச்சேரியில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அனல் போட்டியிடும் வேட்பாளர்கள், காலை 5:30 மணிக்கே, ‘ஓட்டு போடுங்க’ன்னு பிரசாரத்துக்கு கிளம்பி, இரவு 10:00 மணி வரை சாப்பிடக் கூட நேரமில்லாமல், பிஸ்கட், தண்ணீர் என சாப்பிட்டு விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியோ, தட்டாஞ்சாவடி, மங்கலம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டாலும், ‘மைண்ட் ரிலாக்ஸாக’ இருக்கிறார்.
‘தினமும் காலையில் ஒரு ரவுண்டு, ஈவினிங் ஒரு ரவுண்டு’ என, தேர்தல் களம் அனல் பறக்கும் சூழலில், டென்னிஸ் களத்தில் ‘கூலாக’ விளையாடுகிறார்.
அவரது டென்னிஸ் ஆர்வத்துக்கு பின்னணி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 20 ஆண்டு களுக்கு முன், தன் அலுவலகத்தில் ரங்கசாமி, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அட்வைஸ் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ‘தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உடற்பயிற்சி இல்லாவிட்டால், ஏதாவது விளையாடலாம்’ என அட்வைஸ் செய்துள்ளனர்.
அன்று முதல், விளையாட்டாக டென்னிஸை ஆரம்பித்த ரங்கசாமி, நாளாக நாளாக டென்னிஸ் மீது ஆர் வமாகி, தினமும் இரு வேளை விளையாடி வருகிறார். வீட்டிலேயே டென்னிஸ் மைதானத்தையும் அமைத்து விட்டார்.
இதனால், அவரது டென்னிஸ் மைதானம், அதிகார மையமாகவும் மாறி விட்டது.
முக்கியமான கோப்புகளில் கையெழுத்து வாங்க வேண்டிய அதிகாரிகள், டென்னிஸ் மைதானத்தில் காத்து கிடக்கின்றனர்.
தனது என்.ஆர். காங்., கட்சியின் முக்கியப் புள்ளிகளுடன் அரசியல் வியூகங்களை வகுப்பதும், இதே டென்னிஸ் மைதானத்தில்தான்.
தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் ஓடிக்கொண்டிருக்க, ரங்கசாமியோ டென்னிஸ் களத்தில் பந்தை விரட்டிக்கொண்டே தேர்தல் கணக்குகளை போடுவதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
