விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதானவரின் ஜாமினை ரத்து செய்ய மனு

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதி மாணவியை கொலை செய்த வழக்கில் கைதான தர்மமுனீஸ்வரனுக்கு ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் அனுமதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் பெற்றோர் தரப்பு தாக்கல் செய்த மனு: எங்களது மகள் பிளஸ் 2 தேர்வு எழுதினார். மார்ச் 10 மாலை 6:00 மணிக்கு சீமைக்கருவேலம் மர புதர் பகுதியில் இயற்கை உபாதையை போக்கச் சென்றார். அவர் வீடு திரும்பவில்லை. குளத்துார் போலீசில் புகார் செய்தோம். உதவி செய்வதற்கு பதிலாக தவறாக பேசி எங்களை விளாத்திகுளம் மகளிர் போலீசுக்கு செல்லுமாறு கூறினர்.

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் விசாரணையில் அக்கறை செலுத்தவில்லை. இரு ஸ்டேஷன்களுக்கு இடையே அலைக்கழிக்கப்பட்டோம்.

மகளின் இறந்த உடலை எங்கள் உறவினர்கள் கண்டெடுத்தனர். அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தர்மமுனீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். ஒரு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் அவருக்கு துாத்துக்குடி மகளிர் நீதிமன்றம் 2024 ல் ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து தர்மமுனீஸ்வரன் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் அனுமதித்து 2025 டிச.8 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவரது மேல்முறையீட்டு மனுவில் எங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

Source link