டெஹ்ரான்: ஈரான் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டால், மேற்காசியாவில் செயல்படும் ஆப்பிள், கூகுள், டெஸ்லா போன்ற

டெஹ்ரான்: ஈரான் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டால், மேற்காசியாவில் செயல்படும் ஆப்பிள், கூகுள், டெஸ்லா போன்ற அமெரிக்க முன்னணி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்து விட்டது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக 10 நாட்களுக்கு தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், இருதரப்பினரும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய தலைவர்களும், அதிகாரிகளும் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அண்மையில், அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர் பிரிவில் வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதி விவகாரங்களின் தலைவராக இருந்த ஜம்ஷித் எஷாகி கொல்லப்பட்டதை ஈரானின் ராணுவ பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி.) உறுதி செய்துள்ளது. ஜம்ஷித் எஷாகி, சீனாவுக்கு எண்ணெய் கடத்தி அதன் மூலம் ஹிஸ்புல்லா போன்ற குழுக்களுக்கு நிதி வழங்கியதாகக் கூறி, 2025ல் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் தலைவர்கள் மேலும் கொல்லப்பட்டால், மேற்காசியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்க நிறுவனங்களை குறி வைத்து தாக்குவோம் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐஆர்ஜிசியின் இந்த மிரட்டல் பட்டியலில் மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் உட்பட 18 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; ‘ஈரானில் நடக்கும் ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுக்கும் ஈடாக, அமெரிக்க நிறுவனங்களின் அழிவை அவர்கள் எதிர்பார்க்க வேண்டும். ஏப்ரல் 1ம் தேதி இரவு 8 மணி முதல் தாக்குதலை தொடங்குவோம். இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உடனடியாக பணியிடங்களை விட்டு வெளியேறுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,’ எனக் குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் இந்த எச்சரிக்கை மேற்காசியாவில் கிளைகளைக் கொண்டுள்ள அமெரிக்க முன்னணி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, உலக நாடுகளுக்கும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த நிறுவனங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link