நமது நிருபர்
ஐந்து கோடி ரூபாய் வரை, பணம் வாங்கிக் கொண்டு, தமிழக காங்., நிர்வாகிகள் தயாரித்த வேட்பாளர் பட்டியலை, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் ஏழு தொகுதிகள் மீண்டும் கிடைக்கவில்லை. அந்த எம்.எல்.ஏ.,க்களில், நான்கு பேர் வேறு தொகுதிகளில் போட்டியிட, தலா 50 லட்சம் ரூபாயை, பெங்களூரு புரோக்கர் வாயிலாக, மேலிட தலைவர் ஒருவரிடம் வழங்கியுள்ளனர்.
இதற்கிடையே, நகர் பகுதி தொகுதிக்கு 5 கோடி ரூபாய், ஊரக பகுதி தொகுதிக்கு 3 கோடி ரூபாய் என நிர்ணயித்து, வசூல் வேட்டை நடந்துள்ளது. அதன்படி, காங்., கோஷ்டி தலைவர்கள், தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தர, ஒரு கோடி ரூபாய் வரை முன் பணம் பெற்றுள்ளனர். பணம் தர விரும்பாத சிலர், டில்லியில் முகாமிட்டு, மேலிட சிபாரிசில் ‘சீட்’ பெற முயற்சிக்கின்றனர்.
கட்சிக்குள்ளேயே, ‘சீட்’ பெற இந்த அளவுக்கு கடும் போட்டி உள்ள நிலையில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை, காங்கிரசில் சேர்த்தது ஏன்? எனவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி.,க்கள், முன்னணி தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்ற, ‘வீடியோ கான்பரன்ஸ்’ கூட்டத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது.
சங்கரன்கோவில், சிங்காநல்லுார், உசிலம்பட்டி, அம்பாசமுத்திரம் தொகுதிகளை பெற்றது ஏன் எனவும், சிவகங்கை, பட்டுக்கோட்டை தொகுதிகளை வாங்காதது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, தொகுதிக்கு தலா இருவர் பெயருடன் பட்டியலை தயாரிக்காமல், தொகுதிக்கு ஒருவர் பெயரை மட்டுமே பரிந்துரைத்து தயாரித்த பட்டியல், ராகுலின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கரூர் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்டோர், தொகுதிகள் விலை பேசி விற்கப்பட்டு உள்ளதாக பகிரங்கமாக புகார் தெரிவித்தனர்.
இப்பிரச்னை குறித்து விசாரித்த ராகுல், காங்., வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடியது தெரியவந்ததும், கோபத்தில், தமிழக காங்கிரசார் அனுப்பிய வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்து விட்டார். தொகுதிக்கு இருவர் வீதம், தகுதி அடிப்படையில் தேர்வு செய்து பட்டியல் அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
