சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 203 ரூபாய் அதிகரித்து 2,246 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் , வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும் , வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்நிறுவனங்கள் , சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப , மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.
அந்த வகையில், ஏப்ரல் 1ம் தேதி இன்று 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 203 ரூபாய் அதிகரித்து 2,246 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ரூ.2078 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 2208 ஆகவும், மும்பையில் ரூ.2031 ஆகவும் விற்பனை ஆகிறது.
வணிக சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்ட போதிலும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வணிக சிலிண்டர் விலை ரூ.200 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால் ஹோட்டல் உரிமையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஹோட்டல்களில் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது ஹோட்டல்களில் உணவுகளின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
