தமிழகத்தில் உள்ள 60 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் திடீரென கட்டண உயர்வு அமலுக்குள் வந்துள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டில் உள்ள 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (01/04/2026) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த மாற்றத்தினால் கட்டணங்கள் 3% முதல் 7% வரை அதிகரித்துள்ளன.
கார், ஜீப் மற்றும் வேன் போன்ற இலகு ரக வாகனங்களுக்கு ஒரு பயணத்திற்கு 5 முதல் 10 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்து, லாரி மற்றும் பிற கனரக வாகனங்களுக்கு அவற்றின் வகையைப் பொறுத்து 15 முதல் 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை-கன்னியாகுமரி, திருச்சி-சேலம் மற்றும் சேலம்-கோயம்புத்தூர் ஆகிய முக்கிய வழித்தடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி மற்றும் மதுரை போன்ற முக்கிய மையங்களில் வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணம் செலுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 77 சுங்கச்சாவடிகளில், மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு காரணமாகச் சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்று பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
