மதுரை: மதுரை, ரிங் ரோடு பகுதியில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் நடத்த தடை கோரிய வழக்கில், ‘விதிகளை மீறி, எந்தவொரு தனிநபர் அல்லது அரசியல் கட்சிக்கு டோல்கேட் கட்டணத்திலிருந்து எவ்வித விலக்கும் அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி வழக்கறிஞர் ஜெயருத்ரன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க , உத்தங்குடி முதல் கப்பலுார் வரை ரிங்ரோடு அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில், அடிக்கடி அரசியல் கட்சிகள், இயக்கங்களின் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இதில் பங்கேற்க வாகனங்களில் செல்வோர், டோல்கேட் கட்டணம் செலுத்துவதில்லை. போக்குவரத்து பாதிக்கிறது. அப்பகுதியில் பொதுக்கூட்டம், மாநாடு, ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும். இடையூறின்றி வாகனங்கள் சென்று வருவதை உறுதி செய்ய, தமிழக சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி என்.சதீஷ்குமார் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு தரப்பில், துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன், வழக்கறிஞர் கார்த்திக், தமிழக அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் மகாராஜன் ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், ‘பெரும்பாலான வாகனங்களில், ‘பாஸ்டாக் ஆர்.எப்.ஐ.டி.,’ வசதி, பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டோல்கேட் கட்டணம்
தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது. டோல்கேட்களை நிர்வகிக்கும் நிறுவனம், விதிகளின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களை தவிர, வேறு எந்த வாகனத்திற்கும் விலக்கு அளிப்பதில்லை.
வாய்மொழி வாதங்கள் ‘தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் செயல் நிறைவடையாத பட்சத்தில், வாகனம் டோல்கேட்டை கடந்து சென்ற பின்னரும் கூட, ஊழியர்கள் டோல்கேட் கட்டணத்தை பற்று வைத்துவிடுகின்றனர். இதன் மூலம் நிதி இழப்பு ஏற்பட்டால், பாதிக்கப்படுவது நிறுவனமே.
அரசுக்கு பாதிப்பு இல்லை’ என, தெரிவித்துள்ளது. போதிய ஆதாரங்களால் உறுதிப்படுத்தாமல், வெறும் எழுத்துப்பூர்வ மற்றும் வாய்மொழி வாதங்களை மட்டும் அடிப்படையாக கொண்டு, நீதிமன்றம் முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல.
அரசியல் கட்சிகள் அல்லது தனி நபர்களுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டை தவிர, மனுதாரர் வேறு எவ்வித குறிப்பிட்ட விதிமீறலையும் சுட்டிக்காட்டவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இருப்பினும், டோல்கேட்கள் எவ்வித இடையூறுமின்றி பராமரிக்கப்பட வேண்டும். விதிகளை மீறி, எந்தவொரு தனி நபருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எவ்வித விலக்கும் அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
