‘வெயிட்டான வேட்பாளர் இனிகோ இருதயராஜ்’-திருச்சியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து அடுத்தக்கட்ட தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனுத் தாக்கல் செய்ய 3 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருவாரூரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.  இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்.

அவரது உரையில் ‘‘திருச்சியில் மட்டும் 327 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பேருந்து நிலையமா அல்லது விமான நிலையமா என்று வியக்கும் வகையில் அமைத்திருக்கிறோம். சூரியூரில் மினி மைதானம், ஜல்லிக்கட்டு மைதானம் என ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் பெயரில் பிரமாண்ட நூலகம், சூரியூரில் ஒலிம்பிக் அகாடமி திறக்கப்பட உள்ளது. கடந்த ஐந்து வருடத்தில் இந்த திருச்சிக்காக 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் தான் உங்களிடத்தில் உரிமையோடு நான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

திருச்சியில் 100 சதவீத வெற்றியை மக்கள் தர வேண்டும். திமுகவிற்காக உழைத்த தந்தை தங்கவேலு வழியில் வந்திருக்கக்கூடிய பாரி வள்ளலுக்கு லால்குடி மக்கள் இந்த முறையும் வாய்ப்பளிக்க வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதி மக்களுடன் இரண்டற கலந்து நிற்கும் இனிகோ இருதயராஜ் அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். சிறுபான்மையின் மக்களுக்காக எதையும் சாதிக்கக் கூடிய வேட்பாளராக, வெயிட்டான வேட்பாளராக இனிகோ இருதயராஜ் உள்ளார். மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெல்லும் வேட்பாளர் மனிதநேய மக்கள் கட்சியைச் சார்ந்த சகோதரர் அப்துல் சமத் அவர்கள் கூட்டணிக் கட்சியைச் சார்ந்து இருந்தாலும் நமது உதய சூரியன் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். கடந்த முறை போலவே இந்த முறையும் அவருக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து அவருக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்திட வேண்டும்” என்றார்.

Source link