லாரியுடன் சேர்த்து 12 டன் கிட்கேட் சாக்லேட் திருட்டு; நெஸ்லே நிறுவனம் அதிர்ச்சி

சுவிஸ் நாட்டை சேர்ந்த ‘நெஸ்லே’ நிறுவனம் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் 4 லட்சம் கிட்கேட் சாக்லேட்கள் திருடு போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தயாரிப்பு நிறுவனத்திலிருந்து 4,13,793 எண்ணிக்கை அளவிலான சாக்லேட்களை ஏற்றிச் சென்ற கண்டைனர் லாரி ஐரோப்பாவில் திருடு போனதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த லாரி இத்தாலியில் இருந்து புறப்பட்டு போலந்து செல்லும் வழியில் உள்ள நாடுகளில் சாக்லேட்களை விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்தது. திருடுபோன அந்த சாக்லேட்கள் 12 டன் எடை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  

இது குறித்து நெஸ்லே நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” விளம்பரங்களில் மக்களை ஊக்குவிக்க கிட்கேட்டுடன் இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவோம். ஆனால், இதனை உண்மையாக எடுத்துக்கொண்ட திருடர்கள், இப்போது 12 டன் கிட்கேட்டுடன் இடைவேளை  எடுத்துக்கொண்டுள்ளார்கள்” என்று நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளது. இது பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும், “இந்த திருட்டு காரணமாகக் கடைகளில் கிட்கேட் சாக்லேட் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம். குறிப்பாக, ஈஸ்டர் தினம் வருவதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான கிட்கேட் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், திருடப்பட்ட சாக்லேட்கள் ஐரோப்பாவில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விற்பனையாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த  சாக்லேட்கள் விற்பனைக்கு வந்தால், அதன் பார் குறியீடுகள் ஸ்கேன் செய்வதன் மூலமாக அதனைக் கண்டறிய முடியும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கவிட்டுள்ளது.

இருப்பினும், சாக்லேட்டுகளுடன் சேர்த்து அதனை ஏற்றிச் சென்ற வாகனமும் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Source link