தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து அடுத்தக்கட்ட தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் வெளியாகி இருந்தது.
திண்டிவனம் தொகுதியில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, பெரியகுளம் தொகுதியில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றல் அரசு, அரக்கோணம் தொகுதியில் கட்சியின் துணைபொதுச் செயலாளர் வழக்குரைஞர் எழில் கரோலின், பண்ரூட்டி தொகுதியில் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநிலச் செயலாளர் அப்துர் ரஹ்மான், திருப்போரூர் தொகுதியில் கட்சியின் அமைப்புச் செயலாளர் பன்னீர்தாஸ், கள்ளக்குறிச்சி தொகுதியில் முனைவர் வழக்கறிஞர் கு.மாலதி, செய்யூர் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
கடந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டிருந்த ஆளூர் ஷாநவாஸுக்கு இந்த முறை சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்பதில் இருப்பதாக யூகங்கள் கிளம்பின. கட்சி மட்டத்திலும் இது விவாதப் பொருளாகியது.
இந்நிலையில் பேஸ்புக் பதிவு மூலம் இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன்.
இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.
அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம். எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
