கந்தர்பால்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீரில் ‘ஆப்பரேஷன் அரஹாமா’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் இரு அசாம் படைப் பிரிவுகள், ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றுடன் இணைந்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கந்தர்பால் மாவட்டத்தின் அரஹாமா பகுதியில் நேற்றிரவு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை உறுதி செய்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
இது குறித்து ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் படைப்பிரிவு விடுத்துள்ள பதிவில், ‘ நேற்று இரவு, பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலில், நமது படைகள் சரியான முறையில் பதிலடி கொடுத்தன. இதில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது,’ எனக் குறிப்பிட்டுள்ளது.
