PBKS vs GT:“இது நமக்கான நாள் இல்லை. ஆனாலும்.!" – தோல்வி குறித்து கேப்டன் சுப்மன் கில்

ஐபில் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 163 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை 19.1 ஓவர்களில் துரத்தி, போட்டியை பஞ்சாப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது.

பஞ்சாப் அணியுடனான தோல்விக்கு பின்னர் பேசிய குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், “நாங்கள் நன்றாகவே பந்துவீசினோம் என்று நினைக்கிறேன். ஆனால், கடைசி ஐந்து அல்லது ஆறு ஓவர்களில் எங்களுடைய பேட்டிங் வேகமெடுக்கவில்லை என்றுதான் கூறுவேன். இந்த பிட்ச் 210-220 ரன்கள் எடுக்கக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. நாங்கள் ஒரு 175 அல்லது 180 ரன்கள் எடுத்திருந்தால் ஒரு நல்ல இலக்காக இருந்திருக்கும்.

Cooper Connolly

இரண்டாவது இன்னிங்ஸின் போது தொடர்ந்து மழை பெய்ததால் பந்து நனைந்தது, இது பேட்டிங் செய்வதற்குச் சாதகமாக அமைந்தது. ஆனாலும் நாங்கள் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். நாங்கள் எதிரணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம். பிரசித் கிருஷ்ணாவை பந்து வீச முன்னரே அழைத்திருக்கலாம், ஆனால் அவர் சரியான நேரத்தில் வந்து விக்கெட்டுகளை எடுத்தார். 17 மற்றும் 18-வது ஓவர் வரை எங்களை ஆட்டத்தில் நீடிக்கச் செய்தார்.

அதே போல் அசோக் சர்மாவைப் பொறுத்தவரை, அவர் கடினமாக உழைக்கிறார். அவர் எங்களுக்குக் கிடைத்த ஒரு நல்ல வீரர். அவர் தொடக்கத்திலும் நன்றாகப் பந்துவீசினார், இறுதியிலும் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் தொடர்ந்து விளையாடி அனுபவம் பெறும்போது எங்களுக்கு ஒரு சிறந்த சொத்தாக இருப்பார். அவர் கடின உழைப்பாளி, நல்ல ஃபீல்டரும் கூட. நான் எனது அணியினரிடம் கூற நினைப்பது, இது நமக்கான நாள் இல்லை. ஆனாலும் நாம் ஓரளவுக்கு நன்றாகவே விளையாடினோம். தொடர்ந்து முன்னேற வேண்டும். தீவிரத்தைக் கூட்ட வேண்டும் மற்றும் உங்களுடைய சிறந்த பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.

Source link